மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய குறைகள் குறித்து மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 59 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 57 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 31 மனுக்களும், மேலும் பல புகார் தொடர்பான மனுக்கள் 49, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 52 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 40 மனுக்களும், என மொத்தம் 288 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 9050 ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா 5900 ரூ மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், ஒரு பயனாளிக்கு 6552 ரூபாய் மதிப்பில் இலவச சலவைப் பெட்டியையும் வழங்கினார்.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிவளாகத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை நடக்க முடியாத நிலைமையில் கைத்தாங்கலாக அவரது மனைவி பிடித்து மெல்ல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார். ஒரு கையில் கணவர், மறுகையில் நடப்பதற்கு உதவும் ஊன்றுகோல் மற்றும் மனுடன் அவர்கள் நடக்க முடியாமல் நடந்து வந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனை கண்ட செய்தியாளர்கள் அவர்களை கைத்தாங்களாக மனு கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை கண்ட மூதாட்டி காலில் விழுந்து கதறினார். அப்போது ஆட்சியர் அவர்களிடம் கேட்டபோது, திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த சின்னையன், கனியம்மாள் என்பதும், கடந்த சில மாதங்களாக தனது கணவருக்கு முதியோர் உதவித் தொகையை வராமல் நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட, தாங்கள் இருவர் மட்டும் தனியாக முதியோர் உதவித் தொகையை மட்டும் வைத்து வாழ்ந்து வருவதாகவும், தற்போது பல மாதங்களாக முதியோர் உதவித் தொகையை வரவில்லை என்று, இதுகுறித்து கிராமத்தில் பணம் கொடுக்கும் பெண்ணிடம் கேட்டால் வங்கியை சென்று கேக்குமாறு சொன்னதாகவும், வங்கிக்கு சென்றால் அதிகாரிகளை பாருங்கள் என்று கூறினார்கள். அதிகாரிகளிடம் சென்றால் அவர்கள் போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டும் என்று அலைக்கழிப்பதாக கூறி கதறினார். இதனை அடுத்து தனி வட்டாட்சியரை அழைத்து உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சம்பவ இடத்திலேயே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், ஆகியோர் கலந்து கொண்டனர்.