தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே ஒரு நீரேற்று நிலையம் இயங்கி வருகிறது. இதில் இருந்து  புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத போர்வெல் மூலம் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், மேலும் புதிதாக 43 ஊர்களுக்கு குடிநீர் வழங்க, மற்றொரு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த குடிநீர் நீரேற்று நிலையத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பூமிக்கடியில் வெகுதொலைவில் சென்றதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.




 


இந்நிலையில் நேற்று திருச்சென்னம்பூண்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி, கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பாக வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து திருச்சென்னம்பூண்டி விவசாயிகள் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றில் எங்கள் கிராம பகுதியில் ஏற்கனவே மூன்று இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் சாகுபடி பயிர்களுக்கு போர்வெல்லில் தண்ணீர் வராமல், கூடுதல் செலவு செய்து அதிக ஆழத்துக்கு மீண்டும் புதிதாக போர்வெல்போடும் நிலை விவசாயிகளுக்கு உருவானது.




கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் போர்வெல் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில்  நிலத்தடி நீர் குறைந்து, குடி தண்ணீரில்  காரத்தன்மை அதிகரித்துள்ளது. இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டால் எங்கள் வளமான பகுதி நிச்சயம் பாதித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இரண்டாவது நீரேற்று நிலையம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.  




கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத பம்ப் அமைக்க கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அங்கு குவாரி அமைக்க கூடாது எனவும் தெரிவித்தோம். இந்நிலையில், இரண்டாவதாக ராட்ஷத பம்ப் அமைத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும். முதல் முறை போடப்பட்ட ராட்ஷத பம்பால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் விவசாயம் பாதிக்கும். ஆறுகளில் ராட்ஷத பம்ப் பொருத்தினால் சுமார் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு வேறு எங்கும் பம்ப் அமைக்க கூடாது. ஆனால் விதியை மீறி அமைத்து வருகின்றார்கள்.


இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் புதிதாக நீரேற்று நிலையம் அமைத்தால் இப்பகுதி மக்கள்  வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றி வைத்தோம். உடனடியாக பம்ப் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால், போராட்டம்செய்யப்படும்  என்றனர்.