தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 


 




இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மனைவி 64 வயதான அன்னதாட்சி. இவர்  நடைபெற உள்ள மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார். நேற்று தனது வார்டுக்கு உட்பட்ட அதிமுக தொண்டர்களுடன் காலையில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். 




இந்நிலையில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான  காலை அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். மதியம் உணவு அருந்திய அவர் மாலை  சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்துகொண்டுள்ளார். பூஜையில் கலந்து கொண்டிருந்தபோது  அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அன்னதாட்சி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி இறந்துபோனதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அதிமுகவினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.




இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி நேற்று மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தை அடுத்து அந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால்  மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான  தேர்தல் விதி 34(1)(C) தமிழ்நாடு நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் 2006 விதிகளின்படி தேர்தல்  ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு தெரிவித்துள்ளார்.