தஞ்சாவூா்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சாவூரில் திமுக நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூரில்...
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரியலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைத்தை முன்னிட்டு அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.
அரியலூர் சத்திரம் பகுதியில் தொடங்கிய அமைதிப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், அன்னதானம் வழங்கியும் அவரது ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில்...
ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது இதனை ஒட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் கருணாநிதி, திமுக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து மெளன ஊர்வலமாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.