தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல். ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது. விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

Continues below advertisement

களிமண்ணால் செய்யப்பட்டவை

களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP). பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுப்படுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/ எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த /மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள (வடவாறு. கல்லணைக்கால்வாய், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு மற்றும் மல்லிப்பட்டினம் கடற்கரை) இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பெருமை

கணபதியை தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு.எந்த காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன், முழுமுதற் கடவுள் விநாயகர். தன்னை வழிபடும் பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு. நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம்,கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர் என்பதால் விநாயகர் தத்துவப் பொருள். முக்காலத்துக்கும் வழிகாட்டு பவர், நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம்.அவரை வழிபடுவதால் சுகம்,ஞானம்,ஆனந்தம் என அனைத்தும் தேடி வரும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.