காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தவர் மகேந்திரன். 44 வயதான மகேந்திரன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள குக்கிராமங்களிலும் கடுமையான பாதிப்பை கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவையும் முடங்கியிருந்த காரணத்தாலும், கொரோனா அச்சத்தாலும் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அருகில் இருப்பவர்கள் யாரும் முன்வரவில்லை. பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளும் முறையாக கிடைக்காத காரணத்தாலும், தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் காரணத்தாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, மகேந்திரன் தனது சொந்த காரான மகேந்திரா எஸ்.யூ.வி. சொகுசு காரை, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் ஆம்புலன்சாக மாற்றியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே அவரது காரில் பிரத்யேகமாக ஆக்சிஜன் சிலிண்டரையும் பொருத்தியுள்ளார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு செல்வது என்றால் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, சில தனியார் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாமரன்கோட்டை கிராமத்தில் 60 வயது பெண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு எந்தவித வாகனங்களும் ஏற்பாடு செய்ய இயலாத காரணத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் மகேந்திரன் கூறினார்.
மேலும். இந்த கார் ஆம்புலன்சை ஓட்டுவதற்காக 28 வயதான முத்து என்ற இளைஞரையும் மகேந்திரன் நியமித்துள்ளார். முத்து தனது காரில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச்செல்வதால் அவருக்காக தனியாக அறை ஒன்றையும், முகக்கவசம், சானிடைசர், கொரோனா பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் மகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.
கொரோனா மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி எம்.எல்.ஏ. எம்.எச்.ஹாசனிடம் இரு தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்துதருமாறும் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ பணம் மட்டும் போதாது, மனம் இருந்தாலும் போதும் என்பதை தான் இது போன்ற உதவிகள் உணர்த்துகிறது. இதே போன்று அந்தந்த பகுதிகளில் வசிப்போர் ஒருவருக்கொருவர் உதவ முன்வந்தால், எத்தனை அலை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் மக்களுக்கு வரும்.