தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா சுந்தரபெருமாள்கோயில் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இங்குள்ளவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக சுந்தரபெருமாள் கோயில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், தொடர்ந்து நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகளில், தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டுமானால், சுமார் 10 கிலோ மீட்டர் துாரமுள்ள கும்பகோணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், பெரும்பாலானோர் சுந்தரபெருமாள்கோயிலிலுள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விடுவார்கள். இதனால் அரசு பள்ளிகளிலும், மாணவர்களின் சேர்க்கை இலக்கின் படி இருக்கும்.




இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பல லட்சம் செலவில் வகுப்பறைகள் கட்டப்பட்டது. அக்கட்டிடத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகளில் தற்போது மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், பள்ளி கட்டிடத்தின் இஸ்திர தன்மை இல்லாததால், கட்டிடத்தை சுற்றிலும் விரிசல்களும், மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது. மேலும், மாணவர்கள், வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள ஜன்னல்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் எழும்பு கூடாக காட்சியளிப்பதால், மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடன், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள். இப்பள்ளியில் தற்போது சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ குழந்தைகள் படித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுந்தரபெருமாள்கோயிலில் ஆபத்தான நிலையிலுள்ள பள்ளி கட்டிடத்தை சீர் செய்யவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இந்த ஊராட்சியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  பள்ளிகட்டிட வகுப்பறைகள் கட்டப்பட்டு சுமார் 5 வருடத்திற்கு மேலானாதால், கட்டிடத்தின் இஸ்திர தன்மை கேள்வி குறியாகியுள்ளது. வகுப்பறைகளிலுள்ள மேற்கூரைகள், நடந்து செல்லும் பாதையின் மேற்கூரைகள், பக்கவாட்டில் உள்ள போர்டிகோ, ஜன்னல்களின் போர்டிகோ உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர், புகாரளித்தால், மாவட்ட நிர்வாகம், கட்டிடத்தை சீர் செய்யாமல், வர்ணம் பூசி விட்டு, அழக படுத்தி விட்டு சென்று விட்டனர். இதனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளும் கட்டிடத்தை பற்றி கவலைப்படாமல், வர்ணம் பூசியதை மட்டும் பார்த்து விட்டு சென்று விட்டனர்.




திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து, மூன்று பிஞ்சு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,தமிழக அரசு, இனி வரும் நாட்களில் பள்ளி கட்டிடம் கட்டும் ஒப்பந்தகாரர்கள், தரமான கட்டிடமாக கட்டுகின்றார்களா, எத்தனை வருடம் சிதிலமடையாமல் இருக்கும் என்பதை எழுத்து பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவு விடவேண்டும் என்றார்.