தஞ்சாவூர்: தஞ்சையில் நடக்கும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் வைக்க வரும் 20ம் தேதிக்குள் கலைஞர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலை பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப்பயிற்சிகள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியம், சிற்பக்கலை காட்சியை மண்டல அலுவலகங்களில் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது. தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை) உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக்கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்திடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவிய, சிற்ப கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபுவழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்ப படைப்புகளை வழங்க வேண்டும். அனைத்து ஓவிய, சிற்ப கலைப்படைப்புகளும், ஓவிய, சிற்ப கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். அக்கலை படைப்புகள் அனைத்தும் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அளவில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.
அதில் முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் தங்களது கலை படைப்புகளை தன் விவர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சை- 613403 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-232252 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பசுந்தீவன சாகுபடிக்கும், மானிய விலையில் புல்வெட்டும் கருவிபெறவும் விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் மானாவாரி முறையில் பயனாளிகளின் நிலத்தில் தீவிர பசுந்தீவன சாகுபடி செய்ய ஏதுவாக 2024-25-ம் ஆண்டு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில்100 சதவீத மானியத்தில் பசுந்தீவன பயிர்களை சாகுபடி செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஆடு, மாடுகள் வளர்த்து வரும் அரை ஏக்கருக்கு குறையாமல் 22 ஏக்கர் நிலத்தினை கொண்ட விவசாயிகள் பயனடையலாம். தீவன சோளம், காராமணி விதைகள் ஆகியவற்றை விதைத்து உரங்களை இட்டு சாகுபடி செய்து பசுந்தீவன உற்பத்தியை பெருக்கலாம். இதில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தீவன விதைகள் மற்றும் இடுபொருட்களை வழங்கி பசுந்தீவன சாகுபடியை அரசு ஊக்குவிக்கிறது. நீர்ப்பாசன முறையில் பசுந்தீவன சாகுபடி செய்ய விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். ஏக்கருக்கு ரூ.5,500 மதிப்புள்ள விதைகள் மற்றும்இடுபொருட்களை அரசு வழங்குகிறது.
இதே போல் பசுந்தீவன பயன்பாட்டினை மேம்படுத்த ஏதுவாக 50 சதவீத மானிய விலையில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் புல் வெட்டும் கருவிகளை வினியோகம் செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திட்டத்திற்கு மின் சாரம் மூலம் இயக்கப்படும் ஒரு புல்வெட்டும் கருவிக்கு ரூ.16 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பசுந்தீவன சாகுபடி செய்ய தேர்வு செய்துள்ள நிலத்தின் சிட்டா அடங்கல் நகல் ஆகியவற்றை இணைத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் வருகிற 6ம் தேதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.