தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை நடத்தினர்.
இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2- ம் தேதி உலகம் முழுவது உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது வருகிறது.
அன்று தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பின்னர் அவரவர் முன்னோர்களின் குடும்ப கல்லறைகளுக்குச் சென்று அங்கு மலர்களால் அலங்கரிப்பர். பின்னர் மெழுவர்த்தி ஏற்றி முன்னோர்களையும், குடும்பத்தில் இறந்தவர்களையும் நினைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
கல்லறை திருநாளை முன்னிட்டு தஞ்சை திரு இருதய பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேராலயத்தினுள் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் ஆயர்கள் சுந்தரம், பாக்கியம் ஆரோக்கியசாமி, தேவதாஸ் அம்புரோஸ் ஆகியோர் கல்லறைகளை ஆயர் செபித்து புனிதம் செய்தார். இந்த வழிபாட்டில் பேராலய பங்கு தந்தை பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தை அமர்தீப் மைக்கேல் ,ஆயரின் செயலர் ஆரோக்கிய வினிட்டோ கலந்து கொண்டனர். கல்லறை திருநாளை முன்னிட்டு திருஇருதய ஆண்டவர் கல்லறை, வியாகுல மாதா கல்லறை, சூசையப்பர் கல்லறை, மிக்கேல் சம்மனசு கல்லறை, ஆரோக்கியம் செபஸ்தியம்மாள் கல்லறைகளில் திருப்பலியும், கல்லறைகள் புனிதம் செய்யும் சடங்கும் நடைபெற்றது.
இறைமக்கள் இன்று காலை முதல் வெளியூரிலிருந்தும், தஞ்சையில் பல பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் முன்னோர்கள் கல்லறைகளில் மலர்கள் வைத்தும், பூமாலைகள் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
கல்லறை திருநாளையொட்டி பூக்கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. மெழுகுவர்த்திகளும் விற்பனை செய்யப்பட்டன. கல்லறை திருநாளையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து மூதாதையர்களுக்கு வழிபாடு செய்தனர். இதேபோல் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை கிராம கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பூண்டி மாதா பேராலயத்திற்குள் லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து பேராலயத்திற்குள் உள்ள லூர்து சேவியர் கல்லறையை பேராலய அதிபர் உள்ளிட்ட தந்தையர்கள் புனிதம் செய்து வணங்கினர்.
வல்லம் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அப்பகுதியில் இருந்த கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் முன்னோர்களை நினைத்து குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் மூதாதையர்களின் நினைவை போற்றும் விதமாகவும், அவர்கள் எங்களுக்கு கற்று தந்த வாழ்வியல்களை கடைபிடிக்கும் விதமாகவும் கல்லறை தோட்டங்களுக்கு வந்து வழிபாடு செய்கிறோம். எங்கள் மூதாதையர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் சமாதியில் வைத்து வேண்டி கொள்கிறோம் என்றனர்.