தஞ்சை மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 97 மி.மீ. மழை பெய்தது. இதனால், விளாங்குடி, புனவாசல், வில்லியநல்லூர், குழிமாத்தூர் உட்பட கிராமங்களில் நடவு செய்யப்பட்டு 40 நாள்களுக்கு உள்பட்ட நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளன. தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.



இக்கிராமங்களில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்யும்போது, வயல்களில் தண்ணீர் வடியாமல், தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. கடந்த வாரங்களில் மழை பெய்தபோது நெற் பயிரை தண்ணீர் சூழ்ந்தது. பின்னர் விவசாயிகள் சேர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை அகற்றினர். இந்நிலையில் மீண்டும் மழை நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கபட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் மாணிக்கம், தண்டபாணி, அய்யாச்சாமி ஆகியோர் கூறியதாவது:
 
தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 20,000 செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இந்நிலையில், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மிகவும் வேதனையாக உள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியாமல் நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.





கடந்த வாரங்களில் பலத்த மழை பெய்தபோது நெற் பயிரை தண்ணீர் சூழ்ந்தபோது இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பொக்லைன் இயந்திரத்தை வைத்து வாய்க்காலில் இருந்த அடைப்பு சீர் செய்தோம். இருப்பினும், வடிகால் வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டும், புதர்கள் மண்டியும் இருப்பதால் அதிகாரிகள் இதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருவையாறு 97, பூதலூர் 79.8, திருக்காட்டுப்பள்லி 62.6, அய்யம்பேட்டை 54, குருங்குளம் 52, பாபநாசம் 43, கல்லணை 40, வல்லம் 31,தஞ்சாவூர் 30, கும்பகோணம் 27.4, திருவிடைமருதூர் 25.8, பேராவூரணி 19.4, ஈச்சன்விடுதி 5.2, ஒரத்தநாடு 5, மதுக்கூர் 4.6, நெய்வாசல் தென்பாதி 2.4, அணைக்கரை 1.8, வெட்டிக்காடு 1.2. இவ்வாறு மழையளவு பதிவாகியுள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒருங்கிணைந்த அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
தமிழ்நாடு குடிநீர் வாரிய ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் கிளை தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க நலநிதி தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

கடந்த 9 மாதங்களுக்கு 14 சதவீத கூடுதல் அகவிலைப்படியை தமிழக அரசு மற்றும் வாரியம் உடனே வழங்க வேண்டும். முதல்வர் அறிவித்தபடி கடந்த ஜூலை.7ம் தேதி முதல் 3 சதவீத கூடுதல் அகவிலைப்படியை வாரிய பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகதீசன், மாநில துணைத்தலைவர் நடராசன், மாநில இணைச்செயலாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.