தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மயிலாடுதுறையில் நகராட்சி நூலகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவராமன் என்பவரின் முயற்சியால் தன்னார்வ பயிலும் வட்டம் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயிற்சி பெற்று பல அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். மேலும் கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் இங்கு படித்த 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசு அதிகாரிகளாக உருவெடுத்துள்ளனர். 




இந்நிலையில் தற்போது இந்நூலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 12 வகையான போட்டித் தேர்வுகளுக்காக 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2019 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயாராகியுள்ளனர். இந்த சூழலில் டிஎன்பிசி குரூப் தேர்வுகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்பு கல்வியாளர்கள், மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருந்த போதிலும் 2022 ம் ஆண்டில் நடைபெறும் தேர்விலேயே புதிய பாடத்திட்ட தேர்வை  நடைமுறைபடுத்தினால் மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்படும் என்று இங்குள்ள கல்வியாளர்களும், மாணவர்களும் வேதனையடைந்துள்ளனர்.




மேலும் இது குறித்து தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கூறுகையில், புதிய முறைப்படி தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு குரூப் 1 தேர்வினை எழுதவுள்ள மாணவர்கள் எளிதில் தயாராகி விடுவார்கள். ஆனால் குரூப் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பொது அறிவு கேள்விகளுக்கு 175 மதிப்பெண்களுக்கும், ஆப்டிடியூட்க்கு (கணிதம்) 25 மதிப்பெண்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு மேலாக இரவு பகல் பராமல் படித்து தயாராகி வந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள தமிழ் கட்டாயம் என்ற தேர்வுமுறைப்படி 100 மார்க் தமிழில் 75 மார்க் பொது அறிவிலும், 25 மார்க் கணிதத்திலும் கேட்கப்பட உள்ளதால் போட்டிதேர்வுகளுக்கு தயாராகியுள்ள  தங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.




புதிய முறைப்படி தமிழ் கட்டாயம் என்ற நடைமுறையில் தேர்வு எழுதுவது தங்களுக்கு எளிமையானது என்றாலும், குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும், இதேபோல் குரூப் 4 தேர்வுக்கு தயாராகியுள்ள பொது அறிவு ஆங்கில வழி தேர்வுக்கு தயாராகியுள்ள மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் 2019 அரசாணைப்படி தயாராகியுள்ள மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுவது கடினம் என்றும் புதிய நடைமுறை தேர்வை வருகின்ற தேர்வில் நடைமுறைபடுத்தாமல் தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் தேர்வில் நடைமுறைபடுத்த கல்வியாளர்களும், தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.