தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போக்கிரி ரவுடிகளின் நடத்தைகளைக் கண்காணித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 51 போக்கிரி ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் மனிதநேய நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு தொடங்கி காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் குற்ற செயல்களில் ஈடுபடாமல், கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக எந்த வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்து வரும் 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு நன்னடத்தை காரணமாக, அவர்கள் திருந்தி வாழ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வாய்ப்பு வழங்கினார்.
இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கொரடாச்சேரி காவல் நிலையம், மன்னார்குடி காவல் நிலையம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம், நன்னிலம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போக்கிரி ரவுடிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் வந்த 51 போக்கிரி ரவுடிகளை திருந்தி வாழும் வாய்ப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளை நேரில் அழைத்து, அவர்களது குடும்ப சுழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, நன்னடத்தை, குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருந்தி வாழ்வதற்காக 51 பேருடைய போக்கிரி பதிவேடு சட்டரீதியாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இத்தகைய அரிய வாய்ப்பினை மீறி யாரரேனும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர்களின் நல்வாழ்விற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.