தஞ்சாவூர்: தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் காருகுடி ஊராட்சியை இணைப்பதை தடுக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 150க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் காருகுடி ஊராட்சி உள்ளது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் காருகுடி ஊராட்சியை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலைதிட்டம்தான் உறுதுணையாக உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.




திருவையாறு நகராட்சி உடன் எங்கள் காருகுடி ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.


இதேபோல் காருகுடி கிராம மக்கள் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே காருகுடி ஊராட்சியை திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா புலவஞ்சி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குபேந்திரன் என்பவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா புலவஞ்சி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து மக்கள் நடந்து செல்ல விடாமல் மிரட்டி அச்சுறுத்தி வந்தனர்.


இது குறித்து ஏற்கனவே இரண்டு முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பொது சாலையை மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் அறிவித்து இருந்தோம். இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதையொட்டி நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் அந்த பொதுச் சாலையில் வழி மறைப்பது, ஆக்கிரமிப்பது போன்றவை இருக்கக்கூடாது என்று இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திட்டோம்.


இருப்பினும் அந்த தனிநபர் சாலையில் செல்பவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.