தஞ்சாவூர்: போலி பாஸ்போர்ட் தயாரித்து இலங்கை அகதிகளுக்கு வழங்கிய வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து இதுகுறித்து ரகசிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. க்யூ பிரிவு டி.எஸ்.பி., சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


இந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றும் கோவிந்தராஜ் (64) என்பவர் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வடிவேல் (52), ராஜாமடம் பகுதியை சேர்ந்த சங்கர் (42) என்பவரிடம் போலி பாஸ்போர்ட்டுகளை விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இதையடுத்து கடந்த 12ம் தேதி க்யூ பிராஞ்ச் போலீசார் கோவிந்தராஜ், வடிவேல் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தினர். போஸ்ட்மேன் கோவிந்தராஜிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில் வடிவேல், சங்கர் இருவரும் போலி முகவரியை அளித்து, போலி பாஸ்போர்ட்கள் தங்களிடம் வந்து கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். இது போல இந்தாண்டு மட்டும் சுமார் 38 போலி முகவரியுடைய பாஸ்போர்ட்டுகளை இருவரிடமும் கோவிந்தராஜ் கொடுத்துள்ளார்.


இதற்காக பாஸ்போர்ட் ஒன்றுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணத்தையும் தான் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  இதன் அடிப்படையில் வடிவேல் மற்றும் சங்கரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருச்சி துறையூர் சுந்தர்ராஜ், வைத்தியநாதன் (52) ஆகியோருடன் இணைந்து போலியான ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்கூல் டி.சி.,  என போலிச் சான்றிதழ்களை தயாரித்து கும்பகோணம் மகாமகக்குளம் அருகில் உள்ள சரண் பிரவுசிங் சென்டர் நடத்திவரும் ராஜூ (31), என்பவர் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடர்ந்து பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் போலீசார் பாஸ்போர்ட் தகவல்கள் உண்மையா என்று ஆய்வு செய்வார்கள். இதற்கு பாஸ்போர்ட்டில் உள்ள சம்பந்தப்பட்ட நபர் வர வேண்டும் என்பதால் அதை செய்ய முடியாத காரணத்தால் சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எழுத்தர் ஷேசா மூலம் பாஸ்போர்ட் விசாரணையின் போது, பாஸ்போர்ட் பெறும் சம்பந்தப்பட்ட நபரை காண்பிக்காமல் போலீஸ் விசாரணையை முடித்துள்ளனர்.


இதற்காக பாஸ்போர்ட் விசாரணை செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்புவதற்காக எழுத்தர் ஷேசா சொந்த செலவில் பாலசிங்கம் (36) என்பவரை நியமித்ததும் தெரியவந்தது. இந்த மோசடிக்கு பின்னணியில் சேதுபாவாசத்திரம் பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்ற போஸ்ட்மேன் பக்ருதீன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். தொடர்ந்து சுந்தர்ராஜ், வைத்தியநாதன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சேதுபாவாசத்திரம் போலீஸ் எழுத்தர் ஷேசா நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அங்கு பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் சச்சிதானந்தம் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.