தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் 'உஷக் காலம்" என்கிறோம்.
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாகும். இந்த நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
"பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
"எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து சென்றார். தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது பக்திகோஷம் எழுப்பப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. மேலும் பள்ளி அக்ரஹாரம் வீரநரசிம்மர், மணி குன்றா பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணிக்குன்ற பெருமாள், நீலமேகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமுனி கோயில், நரசிம்ம பெருமாள் தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கீழவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், வடக்கு வாசல் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது.