காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளை நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதிப்பு கச்சா எண்ணெய் எடுப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு என்பது ஆண்டு தோறும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனையடுத்து விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.



அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னரும் தொடர்ந்து புதிய குழாய் பதிக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். தற்போது விவசாய நிலத்தை சமன் செய்து டிராக்டர் மூலமாக உழவு அடித்து வயல்களுக்கு தண்ணீர் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய விவசாய நிலத்தை இன்று காலை சென்று பார்த்தபொழுது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் பொங்கி விளைநிலம் முழுவதுமாகப் பரவி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் விவசாயி சிவகுமார்.

 

இதன் காரணமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் தற்போது கச்சா எண்ணெய் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயி சிவகுமார் வேதனை தெரிவிக்கிறார். மேலும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக குழாய் அடைப்பை சரிசெய்யவில்லை என்றால் மீதமுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் கச்சா எண்ணெய் பரவி, அனைத்து நிலங்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். உடனடியாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்யவேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்தப் பகுதி விவசாயிகள் வைத்துள்ளனர்.



தொடர்ந்து ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களில் பதித்த குழாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.