நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நள்ளிரவு நடைபெற்றது. சப்பரமானது தெற்கு வீயில் திரும்பும்பொழுது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டைபோடும் தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த தீபராஜன் விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால், சப்பரத்தின் ராட்சத சக்கரமானாது தீபராஜின் வயிற்றில் ஏறி இறங்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தளங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து உத்திராபதிஸ்வரர் ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதிஸ்வரர் சுவாமி சப்பரம் தெற்கு வீதி திரும்பும் பொழுது 10 அடி தூரத்தில் இரவு 12.35 மணிக்கு விபத்துக்குள்ளாகி உள்ளது.
தொடர்ந்து பிரேத பசிசோதனைக்காக தீபராஜன் சடலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அவரும் விசாரணை மேற்கொண்டார்.நாகை அருகே கோவில் திருவிழா சப்பரத்தில் சிக்கி முட்டுக்கட்டை போடும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.