தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராம குடியிருப்பு பகுதி மற்றும் கோயில்களுக்கு அருகில் மயான கொட்டகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது நீக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குளிச்சப்பட்டு கிராம மக்கள் மனு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;
மயான கொட்டகை அமைக்கும் பணி
தஞ்சாவூர் மாவட்டம் கூச்சப்பட்டு கிராம குடியிருப்புகள் கோயில்கள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கு அருகில் அம்மாபேட்டை ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சியில் மயான கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிதாக அமைக்கும் சுடுகாட்டை சுற்றி கிழக்கே மிகவும் பழமை வாய்ந்த கொடைமுகி அய்யனார் கோயிலும், மனை பிரிவுகளும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
.
மேக்கப் பகுதியில் பழமை வாய்ந்த வீரனார் கோயிலும், பட்டவன் கோயிலும் உள்ளது. வடக்கு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தர்கா உள்ளது. நான்கு கோயில்களின் புனிதமும் இதனால் கெடுகிறது. குளிக்கப்பட்டு கிராமத்தில் மிக அருகாமையில் அமைவதால் மிகவும் இன்னல்கள் ஏற்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு தற்போது அவசர அவசரமாக 20 நாட்களில் மயான கொட்டகை அமைத்து வருகின்றனர். இந்த மயான கொட்டையை வேறு இடத்தில் அமைப்பதற்கு மாற்று இடம் இருந்தும் இப்பகுதியில் அமைக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மயான கொட்டகை வேலையை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து மனு
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி காதர் மொய்தீன் என்பவர் மனவளர்ச்சி குன்றிய தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து தஞ்சை கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெருவில் காதர் மொய்தீன் (56) ஆகிய நான் வசித்து வருகிறேன். 45 சதவீதம் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி. 100 சதவீதம் மனவளர்ச்சி குன்றிய மகன் ஹாஜா மொய்தீன் ( 30 ) உடன் வசித்து வருகிறேன்.
எனது இன்னொரு மகனின் கல்விக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2.60 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். இதில் ஒரு லட்சத்து 3500 கட்டியுள்ளேன். இருப்பினும் வங்கி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தினமும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக எனக்கும், எனது மகனுக்கும் வரும் பணத்தை இந்த கடனுக்காக பிடித்தம் செய்து கொள்கின்றனர்.
இதனால் வெகுவாக மன உளைச்சலில் உள்ளோம். எனது மற்றொரு மகன் தற்பொழுது தான் வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கியுள்ளார். எனவே எங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பணத்தை கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்தத் தொகையை வைத்து நாங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.