மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொடியம்பாளையம் தீவு கிராமத்திலல் அக்கிராம மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் உள்ளிட்டவை  ஒரு ஏக்கர் பரப்பளவில் 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைஃப் சொசைட்டி மூலம் மாங்குரோவ் காடுகள் விரிவாக்க பணி செய்வதற்கான இடம் ஆகியவற்றை நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா படகில் 7 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் பயணித்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 




தொடர்ந்து ஆட்சியர் லலிதா கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளி, குளம் கட்டுமான உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொடியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மதிய நேரத்தில் சென்ற ஆட்சியர் லலிதா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதியம் வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தவர், பருப்பு வேகவிலை, உணவில் உப்பு குறைவாக உள்ளது, அரிசியும் வேகவில்லை என சமையலருக்கு அறிவுரை வழங்கினார்.




தொடர்ந்து சத்துணவின் தரம் திருப்திகரமாக இல்லாததால் பயன்படுத்தப்படும் பொருட்களை ஆய்வு செய்தபோது, மதிய உணவில் பயன்படுத்திய துவரம் பருப்பு பூச்சி பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் லலிதா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் (பொறுப்பு) ராமதேவனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.






தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியைக்கு மாணவச்செல்வங்கள்  கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊர்வலமாக அழைத்துச் சென்று பெற்றோர் பாராட்டி வாழ்த்து.


மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 34 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிவரும் சு.சுதாவிற்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னை வழங்கப்பட்டது. விருது பெற்று பள்ளிக்கு திரும்பிய நல்லாசிரியர் சுதாவிற்கு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆதீன மேலவீதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து ஆசிரியை சுதாவிற்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்த மாணவச் செல்வங்கள் அவருக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 




மேலும், விருது பெற்ற ஆசிரியரை மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருதுபெற்ற ஆசிரியருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துவந்தனர். தொடர்ந்து, பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்கள் நல்லாசிரியர் சுதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.