மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் ஏப்ரல், மே மாதங்களில் விதைவிட்டு நடவுசெய்த குறுவை பயிர்கள் தற்போது அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று மேட்டூர் அணையிலும் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக பாசனத்திற்கு முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் கதிர்கள் வந்து முற்றும் தருவாயில் இருந்து வருகிறது. 




மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் எக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் செய்வதற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இந்த நேரடி நெல் கொள்முதல் மூலம் சேத்தூர், மேலாநல்லூர், உடையூர், பருத்திக்குடி,  மன்னிப்பள்ளம், பொன்வாசநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த குறுவை நெல்லை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். 




இந்நிலையில், இந்தாண்டு குறுவை நெல் அறுவடை நடைபெற்று வரும் சூழலில் அரசின் நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறப்பதற்கு ஏதுவாக விவசாயிகள் ஒன்றிணைந்து சேத்தூர் அய்யனார் கோவில் அருகே ஷெட் அமைத்து கொடுத்ததுடன், தாங்கள் அறுவடை செய்த நெல்லை அங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 




இதனால் ஆத்திரமடைந்த சேத்தூர் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் இன்று திடீர் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழியில் இருந்து மணமேடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மணமேடு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விரைந்து அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு களைந்து சென்றனர்.




1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது. இங்கு குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.




தொடர்ந்து நாகமங்கலம் கிராமத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.  தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கினர். இதில் வேளாண்மைத்துறை மாவட்ட இணை இயக்குநர் சேகர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.