மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 28 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று. தொற்றுடன் பணி புரிவதாக வேதனை தெரிவிக்கும் செவிலியர்கள்!



மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனிமைபடுத்திக் கொள்ள விடுப்பு வழங்கவில்லை என்று செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து, தற்போது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தமிழகத்திற்கு அடுத்த ஒரு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நோயிலிருந்து காக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகலாக தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஒப்பந்த ஊழியராக பணி புரிந்த செவிலியர்கள் 1200 பேரை பணி நிரந்தரம் செய்து கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர்.



மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அரசாணை வெளியீட்டு அவர்களின் ஊதிய செலவினங்களுக்காக ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்டனர். எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பு எடுக்காமல் பணிக்கு சென்றுவந்த  செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 18 செவிலியர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்களை தனிமைபடுத்திகொள்ள மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்காததால் தொடர்ந்து தொற்றுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் வலியுறுத்தி செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். 



இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து போராட்டம் செய்ய வந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால்  மருத்துவமனை வளாகத்தில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



தொற்று உறுதிசெய்யப்பட்ட செவிலியர்களை எதன் அடிப்படையில் பணியில் அமர்த்தினார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்திருக்கும் நிலையில், செவிலியர் பற்றாக்குறையை போக்க அங்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் .