மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 22 ஆயிரத்து 402 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 17847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் தற்போது 4287 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 268 பேர் கொரோனாவால் பலியுள்ளனர். 



இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, கொரோனா நோய்த்தொற்றை சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் வகைப்படுத்தி கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் தலைமையில் மருத்துவப் பணியாளர்கள் சுமார் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் என்ற அடிப்படையில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களை சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களின் ஒப்புதலுடன் இம்மாவட்டத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வகைப்பாட்டு மையத்திற்கு செல்ல அறிவுறுத்த இருப்பதாகவும். பொதுமக்கள் அச்ச உணர்வோ, கூச்சமோ இன்றி அந்தந்த பகுதிகளில் உள்ள கொரோனா வகைப்பாட்டு மையத்திற்கு சென்று தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் உதவிகள் வழங்கப்படும் எனவும். 04364 222588, 9342056967, 9342063580 ஆகிய கட்டுப்பாட்டு நிலையங்களின் தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் இது குறித்த தங்கள் சந்தேகங்களை கேட்டு ஆலோசனை பெறலாம் எனவும் தெரிவித்தார். 



மேலும் தொடர்ந்து பேசியவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் நிரப்பும் டேங்க்  நிறுவும் பணி நிறைவுற்று உள்ளதாகவும், நாளை முதல் சோதனை அடிப்படையில் அதில் திரவ ஆக்சிஜன் நிரப்பப்படும் என்றும், திங்கள்கிழமை முதல் இது பயன்பாட்டிற்கு வரும் என்றார். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சேவை சார்ந்த இயக்கங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புதிய முறை மயிலாடுதுறையின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் தான் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.