மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி சிவன், எமன், கொரோனா வைரஸ் வேடமணிந்து மயிலாடுதுறையில், நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை வீதி நாடகம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியது.


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இருந்தும் ஊரடங்கு பலதரப்பட்ட மக்கள் மீறி வீதிகளில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு காவல்துறை அபராதம் விதிப்பு, வாகனங்களை பறிமுதல் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 ஆயிரத்து 817 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 17470 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் தற்போது 4095 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 252 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசால் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில், நாட்டுப்புறக் கலைஞர்கள் நடத்திய வீதி நாடகம் நடைபெற்றது. அப்போது அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் என்பவர் தலைமையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் சிவன், எமன் மற்றும் கொரோனா வைரஸ் வேடமணிந்து வீதி நாடகம், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.   



பொதுமக்கள் ஊரடங்கை மதித்து நடக்கவேண்டிய அவசியம் குறித்தும், தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. சோப்பு போட்டு கை கழுவுதல் முககவசம் அணிந்திருக்க வேண்டும், கொரோனா வைரஸ் பாதிப்புகள்  குறித்து விளக்கினர். சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது, எமன் பாசக்கயிறை வீசுவது போலவும், சிவபெருமான் அவர்களை காப்பாற்றி, முகக் கவசம் அணிவதன் அவசியத்தை விளக்குவது போலவும் நடித்துக் காண்பித்தனர். மக்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் மதிக்கவேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் மயிலாடுதுறை பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில், நடத்திய நாடகம் கொரோனா வைரஸ் தாக்கத்தை மக்களுக்கு எளிதில் உணர்த்துவதாக அமைந்திருந்தது.