வீடு தேடி சென்று கொரொனா தடுப்பூசி போடும் பணியில் ஏற்படும் சிரமங்கள் உட்பட பல கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி பணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதால் சுகாதார செவிலியர்கள் அனைவரும் மன உளைச்சலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை என்று மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.  வேலை நாட்களில் சிறிது நேரம் ஒய்வு வழங்க வேண்டும், இலக்கினை எட்டும் வகையில் ஊழியர்களை அலைகழிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டும்.




தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் அல்லது தனியார் வாகன வசதிக்கு உரிய தொகை வழங்க வேண்டும்.  பல்வேறு பகுதிகளில் நடந்து செல்வதால், உடல் நலிவுற்ற ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தடுப்பூசி போடும்போது சமூக விரோதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதலுக்கு வருவதை தடுத்திட காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும், தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு மற்றும் மிரட்டுவதை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி பணி தொடர்பான கணக்கெடுப்பு பணியை செய்ய சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும். நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




இதில் மாவட்ட தலைவர் ஜெயராணி, செயலாளர் சீதாலட்சுமி, பொருளாளர்  திலகவதி, துணைத் தலைவர்கள் சிவபாக்கியம், ஜெயலட்சுமி, எழிலரசி, ஜெயந்தி, இணைச் செயலாளர்கள் பத்மபிரியா, சிவகாமி, தமிழ்ச்செல்வி, சாந்தி, கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி, மாவட்ட தணிக்கையாளர் தமிழ்செல்வி மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது சுகாதார அலுவலர் சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் சிங்காரவேல் கலந்து கொண்டார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.