பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரல் செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(34) விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு செவிலியர்களிடம் கணேசன் சென்றுள்ளார். அப்போது கையில் இருந்த மருத்துவக் கட்டை கைகள் மூலம் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இதனால் குழந்தையின் துண்டான இடத்தில் தற்போது ஊசியை வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர் விளக்கம் கேட்ட போது, அதை பற்றி எந்த பதிலும் தராமல், மருத்துவமனை நிர்வாகம் மவுனம் காக்கிறது. பச்சிளம் குழந்தையை எவ்வாறு டீல் செய்ய வேண்டும் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், கத்திரிக்கோலால் குழந்தையின் விரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் ,துடித்த குழந்தையின் நிலையை கண்டு பெற்றோர் துடித்து போயுள்ளனர். செய்த தவறை மறைக்க, விரல் இருந்த இடத்தை மறைத்துள்ளனர். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சம்மந்தப்பட்ட செவிலியரை அழைத்து விசாரணை நடத்தவும் இல்லை. சர்வசாதாரணமாக ஏதோ மாத்திரை தொலைந்ததைப் போல மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரத்தை அணுகுவதாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்று காலை வெளியில் வரத்துவங்கிய இந்த விவகாரம் பலரின் மனதையும் பதபதைக்க வைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சம்மந்தப்பட்ட செவிலியர் மற்றும் பொறுப்பு டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், பெற்றோருக்கு பாதிப்பிற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.