தஞ்சாவூர்: திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். செல்போன் ஆடியோவை வெளியிட்ட அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில், கலந்துக்கொண்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: 


நாங்கள் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்


திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களைப் பார்த்தால் மன்னிப்பு கேட்பவர்கள் போல தெரிகிறதா? செல்போன் ஆடியோவை வெளியிட்ட அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இடைத்தேர்தலில் பல கோடியை கொட்டி, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களை எல்லோரையும் ஒரு இடத்தில் கொண்டு வந்த போதும், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் விலக்கியுள்ளோம். 


ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என்றுதான் சொன்னார்கள்


பா.ஜ., மீனவர்கள் விவகாரத்தில் பலவற்றை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என்றார்கள். தேர்தல் பத்திரத்தில் 6,650 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வாங்கி உள்ளார்கள். பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து கூட பணம் வாங்கியுள்ளார்கள். மகாராஷ்டிராவில் ஒரு எம்.எல்.ஏ.,க்கு 32 கோடி ரூபாய் வீதம் 132 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலைசாமி என்ற மீனவர் கொல்லப்பட்டார். அவர் என்ன தற்கொலை செய்துக்கொண்டாரா? இலங்கை ராணுவத்திற்கும் அவரது மரணத்திற்கும் சம்மந்தம் இல்லையா?. இலங்கை சிறையில் எத்தனை மீனவர்கள் உள்ளார்கள் என்ற கணக்கு இருக்கிறதா? எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கான பிரச்சனைக்கு கச்சதீவை நாம் எடுத்துக்கொண்டால் நமது எல்லை அதிகமாகி விடும்.


பாஜ ஆளும் மாநிலத்திற்கு ஒரு கொள்கை


பா.ஜ.,ஆளும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொள்கை வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தரமறுத்து விட்டு ஒரே நாடு, தேசப்பற்று, இறையாண்மை எல்லாம் எதற்காக பா.ஜ.,வினர் பேசுகின்றனர். குடும்பத்தலைவிகள், கல்லுாரிக்கு செல்லும் பெண்கள், இளைஞர்கள் யாராவது ஆயிரம் ரூபாய் கேட்டார்களா?  இந்த திட்டங்களில் எவ்வளவு ஆயிரம் கோடி செலவாகிறது. மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை என தி.மு.க., கூறுகிறது. அப்புறம் ஏன் 100 ரூபாய் நாணயம் வெளியிட கொஞ்சி குழாவினீர்கள். நிதி தரவில்லை என பா.ஜ.,வுடன் கோபித்துக்கொண்டு இருக்கும் தி.மு.க., கர்நாடகாவில் இருந்து நீர் தரவில்லை என காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வேண்டாம் என ஏன் கோபித்துக்கொண்டு வரவில்லை. நிதியை கேட்டு பெறமுடியாத நிலையில், எதற்கு 40 எம்.பி.,க்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த போதுதான் காவிரி, முல்லைப் பெரியாறு, கட்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.


தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்


தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது என கூறுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நல பாதிப்பு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை செல்வது இல்லை. எம்.ஜி.ஆர்.,ஜெயலிலதா அப்பல்லோ மருத்துமனை, கருணாநிதிக்கு காவிரி மருத்துவமனை என்ற போதிலும் அரசு மருத்துவமனை எதற்கு பூட்டு போட்டு விட வேண்டியது தானே. முன்னேறிய ஜாதியினர் முன்னேற்றம் அடைந்த பிறகு அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக்கூடாது போன்ற கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குதான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இரு தரப்பினரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.


போதை பொருட்களால் பாலியல் குற்றம் அதிகரிப்பு


மதுபானம், சாராயம், கஞ்சா போன்றவற்றால்தான் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது.  இந்த நிலைமை நாடு முழுவதும் அதிகமாக உள்ளது. இதனால் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, பட்டுக்கோட்டை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தால்தான் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும் . விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.