பள்ளி மாணவி  லாவன்யா தற்கொலை செய்து கொண்ட மைக்கேல்பட்டி இப்பள்ளியில் மத ரீதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ, மாணவிகளிடம் செய்யப்பட்டவில்லை என தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


தஞ்சாவூர் கல்வி மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 பயின்ற மாணவி இறப்பு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை வெளியானது.


அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி 8-ம் வகுப்பிலிருந்து மைக்கேல்பட்டியில் படித்து வந்தார்.  மாணவியின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பள்ளியின் அருகில் உள்ள மதகண்ணிகைகள் வாழும் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடலிலும், உதட்டிலும் வெண்புள்ளிகள் (vitilgo) உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. 2020 கரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன் பள்ளியில் அரசு மற்றும் தொடர் விடுமுறை விடும்பொழுது, இல்லத்தில் உள்ள மற்ற மாணவிகள் அவரவது சொந்த ஊர்களுக்கு தாய், தந்தையர்களிடம் செல்லும் போது, இம்மாணவி மட்டும் ஊருக்கு செல்லாமல் மதகன்னியாஸ்திரிகள் இல்லத்தில் விடுமுறையை கழித்து பள்ளியில் தொடர்ந்து பயின்று வந்துள்ளார்.




 


கொரோனா காலத்துக்குப் பிறகு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட போது மார்ச் 2020ல் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி 2020-21ம் கல்வியாண்டில் ப்ளஸ்1 வகுப்பில் தொடர்ந்து இப்பள்ளி கல்வி பயின்று நேரடி வகுப்பில் பிப்ரவரி 2021-ல் 9 நாட்களும் மார்ச் 2021 ல் 9 நாட்களும் ஆக மொத்தம் 18 நாட்கள் நேரடி வகுப்பில் கல்வி பயின்றுள்ளார். மற்ற நாட்களில் இணைய வழிக்கல்வி நடைபெறும்போது மற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் போது இம்மாணவி மட்டும் இணையவழி வகுப்பில் பங்கு பெறவில்லை என தெரியவருகிறது.


ப்ளஸ் 2 வகுப்பில் செப்டம்பரில் 12 நாட்களும், அக்டோபரில் 14 நாட்களும், நவம்பரில் 13 நாட்களும், டிசம்பரில் 21 நாட்களும் மற்றும் ஜனவரியில் 10 நாட்களும் மதகன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார் என தெரியவருகிறது. ஜன.10-ஆம் தேதி மாணவிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் (வயிற்று வலி மற்றும் வாந்தி) பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.




ஜன.15-ம் தேதி பள்ளிக்கு போலீசார்,  சென்று விசாரணை மேற்கொண்டபோது தான் பள்ளியில் அம்மாணவி தோட்டத்துக்கு வைத்துள்ள களைக்கொல்லிக்கான பூச்சி மருந்தை குடித்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்தார். மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளில் 5,270 இந்து மாணவ, மாணவியர்களும், 2,290 கிறிஸ்தவ மாணவ, மாணவியர்களும், 179 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்றுள்ளது தெரியவந்தது.  மேலும், இந்த கல்வி ஆண்டில் 444 இந்து மாணவ, மாணவிகளும், 219 கிறிஸ்தவ மாணவ, மாணவிகளும், 405 இஸ்லாமிய மாணவ, மாணவிகளும் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.




இந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்த புகார்கள் ஏதும் வரவில்லை.கிறிஸ்தவ மேலாண்மை நிறுவனத்தினரால் இப்பள்ளி நடத்தப்பட்டாலும், அதிகளவில் இந்து மத மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இப்பள்ளியில் மத ரதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ, மாணவிகளிடம் செய்யப்பட்டவில்லை  என விசாரணையில் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.