தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் டன் கொள்முதல் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி முடிந்து அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ குறுவை சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்வதால் நெல்மணிகள் முளைத்து பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் மாவட்டத்தில் காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வேகன்கள் மூலம் வெளி மாவட்டத்திற்கு அனுப்பும் நெல் மூட்டைகளை பார்வையிட்டு நெல் கொள்முதலில் தாமதம் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் என்று தெரிவித்து சென்றார்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வம் பார்வையிட்டு நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் மெட்ரிக் டன் கிடங்குகளுக்கும் அரவை மில்லுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, மீதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பு உள்ளது. கடந்தாண்டு 95 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகியுள்ளது. இந்த சீசனில் இன்னும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் அறுவடை ஆகாமல் உள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் இரண்டு லாரிகள் அனுப்பப்பட்டு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஒன்றரை மடங்கு வேலை அதிகமாகி உள்ளது.
இந்த ஆண்டு 3 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தனியார் குடோன்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்படுகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது என்றும் பிற மாவட்டங்களான திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன் சாலை வழியாகவும், இரயில் மூலம் 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இதுவரை அனுப்பி உள்ளதாகவும் கூறினார்
இதனிடையே தஞ்சை மாவட்டம் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் நெற்பயிர்கள் முளைத்து வருகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வந்து சென்ற பிறகு தான் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஆட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இங்கு ஆய்வு செய்ய வருவார் என்று நேற்று நீண்ட நேரம் காத்திருந்தோம், அவர் வரவில்லை. எங்களது நிலமை கவலை அளிப்பதாக உள்ளது என்று விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட காட்டூர் பகுதிக்கு தமிழக துணை முதலமைச்சர் செல்லாததால் மிகப்பெரிய விவசாயிகள் அதிருப்தி அடைந்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிடாத முதல்வருக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் நாங்களும் ஆளுங்கட்சி தான் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்