திருவாரூர் நகர் 30வார்டுகள் 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சி, இந்த திருவாரூரை

  மாவட்டமாக கடந்த 1997ம் ஆண்டு துவங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊர் என்றாலும் திருவாரூர் தேர் உலக பிரசித்திபெற்றதாகும், அதேபோல்  பிரசித்தி பெற்ற கோவில் நகரமாக திகழும் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக வரலாறு உண்டு, வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள். இப்படி சிறப்புக்கு மேல் சிறப்புகளும் மாவட்ட தலை நகரமாக கொண்ட இந்த திருவாரூரில் இதுநாள்வரை அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது மிகவும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் இப்பகுதி மக்களிடம் எழுப்பி உள்ளது. இதுநாள்வரை இப்பகுதி மாணவர்கள் அருகில் உள்ள அம்மையப்பன் புலிவலம் போன்ற பகுதிக்கு நீண்டதூரம் சென்றுதான் கல்வி பயின்று வருகின்றனர். 




அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது குறித்து பொதுமக்கள் கூறுகையில்... திருவாரூர் மாவட்டம் 1997ம் ஆண்டு உதயமானது. திருவாரூர் தலைநகரம் ஒரு முக்கியமான நகரமாக உள்ளது. திருவாரூர் நகர் பகுதியில் மட்டும் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த நகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. எப்படியாவது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என்று மக்களுடைய ஆசையாக உள்ளது. ஆனால் திருவாரூர் நகர் பகுதியில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அரசு உதவியுடனும் பெரிய பொருட்செலவு இல்லாமல் அவர்கள் படிப்பதற்கு வசதி இல்லாத நிலை உள்ளது. ஆகவே உடனடியாக தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.




மேலும் தலைமையாசிரியர் ஈவேரா கூறுகையில்... பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பது வழக்கமான ஒன்று ஆனால் திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அரசு உதவிகளை பெற முடியாத நிலை உள்ளது. தற்போது அரசாங்கம் புதிதாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது சட்டத்தின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் பொழுது சிறப்பு ஒதுக்கீடு உண்டு என அறிவித்திருக்கிறார்கள். திருவாரூரில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் அதே போன்று மாணவர்கள் அரசு உதவிகளை பெற வேண்டும் என்ற இரண்டு காரணத்தினால் உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.