திருவாரூர் நகரத்திற்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர்  அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார். அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார். இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக  முயற்சிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர். இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின்  மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த நிலையில் திருவாரூர் நகர காவல் துறையினர் இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. சுரேஷ் உடைய மனைவியின் தாய் வீட்டிற்கு நெருங்கிய நண்பராக கண்ணன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கண்ணன் சுரேஷின் மாமியார் வீட்டுக்கு வருவது பிடிக்காத காரணத்தினால் சுரேஷின் மாமியாரிடம் பலமுறை சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். எதற்காக சண்டை இடுகிறாய் என கண்ணன் சுரேஷிடம் கேட்டதற்கு எங்கள் குடும்பத்தின் பிரச்சனையில் தலையிடுவதற்கு நீ யார் என கூறி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு வந்த கண்ணனை சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து சுரேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.