பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், இந்திய நாட்டின் பண்பாட்டை தொன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் பாரத பிரதமர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வருகின்ற 13ஆம் தேதி காசிவிசுவநாதர் ஆலயத்திற்கான பாதைகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு தொன்மை பழமை மாறாமல் ஆலயம் புனரமைக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத்திலேயே பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த ஆலயத்தை புனரமைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக காசி விஸ்வநாதர் ஆலயத்தை புனரமைத்து கட்டிடங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு 5000 மீட்டர் பரப்பளவில் பாதைகள் அமைக்கப்பட்டு ஆலயத்தை அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

இந்து மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் இந்த ஆலயம் அர்ப்பணிக்கும் பணி நடைபெற இருக்கிறது. இந்த ஆலயம் புனரமைப்பு பணியில் 5000 மடாதிபதிகளும் துறவிகளும் சமுதாயப் தலைவர்களும் பங்கெடுத்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். இந்த அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியானது நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கோவில்களிலும் மடங்களிலும் எல்இடி மூலமாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டின் கலாச்சார நாயகனாக பாரதப் பிரதமர் மோடி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 10 மற்றும் 11 ஆம் தேதி இரண்டு நாட்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் முழுமையாக தூய்மைப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்பது என்பது குறித்த அறிவிப்பை அறிவித்து அதனை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை சரியாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பல மதத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சாரார் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மட்டுமே மீட்டதாக தெரிகிறது மாற்று மதத்தில் இருப்பவர்களிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை இதுவரை மீட்டதாக தெரியவில்லை எனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாகுபாடில்லாமல் செயல்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்துள்ளார் அதே நேரத்தில் அவர் அறிவித்துள்ள நிவாரணம் போதாது. அவர் எதிர்கட்சியாக இருந்த பொழுது பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்பொழுது இடுபொருள் மானியம் என அறிவித்திருக்கிறார் அழிந்துபோன பயிர்களுக்கு எப்படி பயன்படுத்த முடியும் உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும். மேலும் கேதார்நாத்தில் எப்படி காசி விசுவநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டு உள்ளதோ அதே போன்று ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலை பழமை மாறாமல் புனரமைக்கும் பணியில் ஈடுபடுவதற்கு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துவது போல தொடர்ந்து திமுக அரசு அதனை செய்து கொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டு மத்திய அரசினால் அந்த திட்டம் தற்போது செயல்படுத்த இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென்று முத்துவேல் கருணாநிதி என்கிற பதாகையை அங்கு வைத்துள்ளனர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியினர் இதனை கண்டித்து அதிகாரிகளிடம் பேசிய பின்னர் இரவோடு இரவாக அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகை மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபட்டால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.