தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மண்டலக்கோட்டை கிராமத்தை சேரந்தவர் திருப்பதி. பிஎஸ்.சி., பட்டதாரி. இவர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரை சந்திக்க சேலம் பகுதியை சேர்ந்த கபிலன் என்ற வாலிபர் வந்துள்ளார். இந்நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரத்தநாடு விரைந்து வந்து கபிலனை கைது செய்தனர். இவரது செல்போன் சிக்னலை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தஞ்சை மாவட்டம் வந்து கபிலனை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்த திட்டம்:
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் தெரிவித்ததாவது, ஒரு அமைப்பை உருவாக்கி தலைவா்களைக் கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவ வாலிபர் என்று தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த பொறியாளா் சஞ்சய்பிரகாஷ் (25), எருமாபாளையத்தைச் சோ்ந்த பட்டதாரி நவீன் சக்கரவா்த்தி (25). இவர்கள் இருவரையும் கடந்த மே 19-ம் தேதி போலீசார் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னர் நடந்த விசாரணையில், அவா்கள் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யுடியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், வீரப்பன், பிரபாகரன் ஆகியோர் பற்றிய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சேலம் க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டது.
என்.ஐ.ஏ. விசாரணை:
க்யூ பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ஜூலை மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வழக்கை எடுத்துக்கொண்டது. என்ஐஏ அதிகாரிகள் மறு வழக்குப் பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினா். இந்த வழக்கு தொடர்பாக சேலம், சிவகங்கையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், விடுதலைப் புலிகள் தொடா்பான கம்ப்யூட்டர் ஹாா்டு டிஸ்க்குகள், புத்தகங்கள், வெடிப் பொருள்கள் தயாரிக்கத் தேவையான பொருள்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவை சிக்கின.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு, அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் உலகத் தமிழா் நீதி அமைப்பு என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியிருப்பதும், இந்த அமைப்பை விடுதலைப் புலிகள் இயக்கம் போன்று நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், முக்கிய தலைவா்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதும், குறிப்பிட்ட வணிகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் என்ஐஏ விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இயற்கை விவசாயியுடன் சந்திப்பு:
இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் சேலம் மாவட்டம், சின்னபுதூரைச் சோ்ந்த கபிலா் (எ) கபிலன் தலைமறைவாக இருந்தாா். அவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் இயற்கை விவசாயி திருப்பதியை பார்க்க வந்துள்ளார் என்பது அவரது செல்போன் சிக்னலை வைத்து தெரிந்து கொண்ட என்ஐஏ அதிகாரிகள் விரைந்து வந்து கைது செய்தனர். இவ்வாறு போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.