நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 



 

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தாலும் அதை மூடி மறைத்து குஜராத் வெற்றியை பெரிதுபடுத்தி காட்டி வருவதாகவும், பிரதமர் மோடி பி.ஜே.பி. அல்லாத மாநில முதல்வர்கள் உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகவும், தமிழக ஆளுநர் ரவி மதச்சார்பின்மைக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும் பேசி வருவதாகவும், எனவே மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெறக்கோரி வரும் 29ம் தேதி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் மாணவர்கள் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட அதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது புரியாத புதிராக உள்ளது என்றார் .

 

மேலும் யாரை வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது பெற வேண்டியதை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா?  அல்லது கொடுக்க வேண்டியதை கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் கூறியுள்ளார்.  அப்படி என்றால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டதா? என அவர் விளக்கம் தெரிவிக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.