கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஎல் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துரிதமாக உடைப்பு சரிசெய்யப்பட்ட பிறகும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் சிபிசிஎல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மீனவர்கள் நிரந்தரமாக எண்ணெய் குழாயை அகற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குழாய் சரி செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிப்புகள் குறித்து அப்பகுதி மீனவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் ஹைட்ரோகார்பன் போன்ற மண்ணை மலடாக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி கிடையாது. நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள சிபிசிஎல் நிறுவன குழாயை நிரந்தரமாக அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும். கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசை கண்டுபிடிக்க சென்னையில் இருந்து வந்த 3 ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை கடந்த 6 ஆம் தேதி சேகரித்து சென்றுள்ளனர். தமிழர்கள் உபசரிப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் சொந்தக்காரர்கள். தமிழ்நாடு எல்லாரையும் வாழ வைக்கும் மாநிலம். மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை சித்தரித்து விஷம தனம் செய்துள்ளவர்களின் முகத்தில் தமிழக மக்களால் கரி பூசப்பட்டுள்ளது. நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் 2 ஆம் தேதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு 5 ஆம் தேதியே சரிசெய்யப்பட்டது. குழாய் சரி செய்யப்படவில்லை என தமிழக எதிர்கட்சி தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்