தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து கோவைக்கு புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து தங்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பேராவூரணி மக்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கோவைக்கு, புழக்கத்தில் இருந்த பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது. இதன் அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இதேபோல் ரெட்டவயலில் அருள்பாலிக்கும் கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதேபோல் பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் படப்பனார்வயல் ஆலடியார் கோவில். உள்ளது. பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்ஆகியவையும் அமைந்துள்ளது. விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது. இதேபோல் ஒட்டங்காடு ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் ஐயப்பன் சுவாமி கோயில். மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாறு மிகவும் முக்கியமான பகுதியாக பேராவூரணி விளங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு தரப்பினரும் தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் செல்கின்றனர். இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு தினசரி காலை 9.10 மணிக்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பேராவூரணி பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து மிகவும் பழமையான பேருந்து ஆகும். பேராவூரணியில் இருந்து நேரடியாக தொலைவில் உள்ள கோவைக்கு இயக்கப்படும் இந்த பேருந்தை புதிய பேருந்தாக மாற்றி இயக்க வேண்டும் என்று தொடர்ந்து பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த பழைய பேருந்துக்கு பதிலாக புத்தம் புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கொடியசைத்து புதிய பேருந்தை துவக்கி வைத்து, டிக்கெட் எடுத்து சிறிது தூரம் பயணித்தார். இதில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் எஸ்.ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வீரியங்கோட்டை சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொமுச இளமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பேராவூரணியிலிருந்து இயக்கப்பட்ட பேருந்து மிகவும் பழசான ஒன்று. இதில் பயணம் செய்யும் போது வெகுநேரம் உட்கார்ந்து செல்ல முடியாத நிலையாக இருந்து வந்தது. இப்பகுதியிலிருந்து கோவைக்கு அடிக்கடி தொழில் நிமித்தமாக பலரும் சென்று வருகின்றனர். அதனால் இந்த பேருந்தை மாற்றி விட்டு புதிதாக பேருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புத்தம் புதிதாக பேருந்தை தொடக்கி வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.