கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் அன்னம் இயற்கை வழி வேளாண் பண்ணையில்

  நெல் ஜெயராமனும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கும் நினைவஞ்சலியும்,  இயற்கை வேளாண்மைக்கு தேவைப்படும் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சியும் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு இயற்கை இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னையா நடேசன்  தலைமை வகித்தார்.


இதில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட வேண்டும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், பாரம்பரிய ரகங்களை பயிரிட்ட உணவுப் பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிட வேண்டும், நம்மாழ்வார் விட்டுச் சென்ற பணிகளை நாம் அனைவரும் தொடர்ந்து செய்ய வேண்டும்,  நெல் ஜெயராமன் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நாம் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது.மூன்றாம் கண் தொழில்நுட்ப தொண்டர் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் ராஜு,சங்கர் உயிர் உரங்களான பேசில்லஸ் சப்டிலிஸ், பொட்டாஷ் பாக்டீரியா , வேம் உட்பூசணம், ஆகிய உயிர் உரங்கள் எப்படி செய்வது என்று  விளக்கம் செய்து காட்டப்பட்டது.




நிகழ்ச்சியில் விவசாயிகள் பேசுகையில், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட வேண்டும் பொதுமக்கள் பாரம்பரிய அரிசி உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடவேண்டும் குழந்தைகளுக்கு முதல் முதலாக திரவ உணவிலிருந்து திட உணவுக்கு மாறும் பொழுது இயற்கையில் விளைந்த பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக கொடுக்க வேண்டும்,  பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் வாய்ந்தவை அவைகளை தொடர்ந்து விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும் ஏனென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு செலவினங்கள் குறைவதோடு நஞ்சில்லா உணவை உலகிற்கு படைக்கலாம்.


பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு அதனை மதிப்புக் கூட்டி பட்டை தீட்டப்படாத அரிசியாக பொதுமக்களுக்கு வழங்கும் பொழுது நஞ்சில்லா உணவையும் சுகாதாரமான உணவையும் உலகிற்கு மகிழ்ச்சி விவசாயிகளுக்கு ஏற்படும் என்றனர்.தொடர்ந்து  காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரி மாணவர்கள் வயல்களை பார்வையிட்டு, நடவு, அறுவடை விளைச்சல், பாரம்ரியமான நெல்ரகங்கள், இயற்கை உரங்கள், தானியங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.இதில், பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் மருதாநல்லுர் பசுமை எட்வின், ஆதிரங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி பந்தநல்லூர் அசோகன், இயற்கை விவசாயிகள் ராஜேந்திரன்,  உதயகுமார், மயில்வாகனன், டாக்டர் பாலசுப்பிரமணியன், விவசாய கருவிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுத்தமைக்காக ஜனாதிபதி விருது வாங்கிய கும்பகோணம் கார்த்திகேயன், மற்றும் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.




இதே போல் திருக்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகே இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் 8வது ஆண்டு நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இயற்கையையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வாழ்ந்த வேளாண்மை விஞ்ஞானி திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டில் பிறந்தவர். அவரது திருஉருவப்படம் வைத்து மாலை அணிவித்து, மலர்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அவர் வழியில் நடக்க கோரி மக்களுக்கு தென்னை, புங்கன், சொர்கம், மாதுளை, பலா, தங்க அரளி, அரநெல்லி, சென்பகம், மந்தாரை, மஹோகனி உள்ளிட்ட 1300 பழமையான மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஏராளமான இயற்கை நேச ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.