தஞ்சாவூர்: கோடை வெயில் ஒரு புறம் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் அனலை கிளப்ப தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு மத்தியில் மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் முதல்நாள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.  


தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் நேற்று வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.


பாராளுமன்ற தேர்தல் அதிகாரி


தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக கலெக்டர் தீபக் ஜேக்கப்பும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 2 உதவி அதிகாரிகள் வீதம் 12 உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டரிடம் தாக்கல் செய்ய வேண்டும்  இதே போல் தஞ்சையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.




எல்லைக்கோடுகள் அமைப்பு


இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் சாலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கோட்டுக்கு அப்பால் தான் வேட்பாளர்கள் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 அல்லது 5 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முதல் நாளான நேற்று தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்ய வரவில்லை. இனி வரக்கூடிய நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வருவார்கள். இதனை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வருவதை முன்னிட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 27ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புறம், நுழைவாயில் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமத்தப்பட்டனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து உள்ளே வருபவர்கள் முழு பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேட்பாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.