கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாகூர் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

 

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் பதிக்கப்பட்டு இருந்திருந்த கச்சா எண்ணெய் குழாய் கடந்த இரண்டாம் தேதி உடைப்பு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பட்டினச்சேரி கிராம மீனவர்கள் நிரந்தரமாக கச்சா எண்ணெய் குழாயை அகற்ற வேண்டி கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்றையதினம் பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட போவதாகவும் மீனவர்கள் அறிவித்தனர்.



 

அதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் குழாயில் கச்சா எண்ணெய்யை செலுத்த கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். பின்னர் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நாகூர் மீனவர்கள் 5 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு நாகூர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறைந்த அளவிலான பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.