நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் வெளிப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டி மற்றும் பால்பண்ணை சேரியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்து செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நகராட்சி ஊழியர்கள் கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று குப்பைகளை பெற்று வருவதும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் குப்பைகளை தூய்மைப்படுத்துவது அலட்சியம் காட்டி வருவதாகவும் பல பகுதிகளில் சீரான குடிநீர் வரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணைசேரி, பிள்ளையார் கோவில் தெரு, வேலாயுதம் கவுண்டர் தெரு, மாரியம்மன் மாரியம்மன் கோவில் தெரு, நாடார் தெரு, லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்களும் பொதுமக்களும், இன்று காலி குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாக்குமூட்டையில் கொண்டுவந்த குப்பைகளை நகராட்சி அலுவலகம் முன்பு வீசி எறிந்து அவர்கள் கோஷங்களையும் முழங்கினர். பொதுமக்கள் போராட்டுவதை அறிந்த பாஜகவினர், பொதுமக்களுக்கு ஆதரவாக கட்சிக் கொடியுடன் களத்தில் இறங்கி போராடத் தொடங்கினர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் நாள் தோறும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கீழே கிடந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். அலுவலக வாசலில் கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் நகராட்சி அலுவலர்கள், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி இருந்தால் இந்த நிலை தேவையா? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முணுமுணுத்தவாறு சென்றனர்