தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு

  கடந்த 2017 ஆம் ஆண்டு தடை விதித்தனர். இதனை தொடர்ந்து சிறிய கிராமத்தில் உருவாகிய போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது. இப்போராட்டத்தில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்துக்கு, எதிராக நடந்த போராட்டம் தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தது.


இந்த போராட்டத்திற்கு பிறகு ஏராளமானோர் மட்டுமில்லாமல் இளைஞர்கள்,  ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி அதற்கு பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கினர். மதுரை அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழா போல் தஞ்சை மாவட்டத்திலும் திருக்கானூர்பட்டி, மாதாக்கோட்டை, பூதலூர், கள்ளபெரம்பூர், பூக்கொல்லை,ரெட்டிபாளையம் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.




தை பிறந்தாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் களை கட்ட தொடங்கி விடும். பெரும்பாலான  இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும், மாட்டுப்பொங்கல் தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் மாடு அவிழ்த்து விடும் நிகழ்ச்சி நடைபெறும். சில குறிப்பிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போல் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க வரும் காளையர்களுடன் மோதுவதற்கான காளைகளை தயார் படுத்தும் பணி அதாவது காளைக்கு மாட்டிற்கு ஸ்பெஷல்  பயிற்சி அளிக்கப்படுவது இப்போதே தொடங்கி விட்டது.




கும்பகோணம்- தஞ்சாவூர் சாலை பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றின் பகுதியில் இளைஞர்கள் காளையை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஜல்லிகட்டு மேல்  ஏற்பட்ட தாக்கத்தால் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்-சுசில் என்ற வாலிபர்கள் காளைகளை வாங்கி அதற்குப் பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் தமிழகத்தில் தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செய்து பரிசுகளை குவித்து வருகிறார்.




அதன்படி அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள செய்வதற்காக தனது காளைக்கு வெண்ணாற்றில் நீச்சல் பயிற்சி, மண்ணை கிளறி சீறிப்பாய பயிற்சிகள், காளைகளை சீண்டி கோபப்பட வைப்பது, நடைபயிற்சி போன்றவைகளை தினந்தோறும் காலை மாலை நேரங்களில் சிறப்பாக பயிற்சியளித்து வருகிறார். ஒரு காளைக்கு தினமும் சுமார்  500 வரை பராமரிப்பு செலவாவதாக கூறப்படுகிறது. வழக்கமாக அளிக்கப்படும் உணவு தவிர பச்சரிசி, சோளமாவு, கோதுமை தவிடு, துவரம் பருப்பு, பயிர் பொட்டு உள்ளிட்ட சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை கொடுத்து காளைக்கு ஊட்டம் அளித்து வருகிறார்.




இதுகுறித்து சதீஷ்–சுசில் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து அதன் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் காளை மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம். இதற்கு முன்பாக கட்டைகாரி வகை ஜல்லிக்கட்டு காளை வளர்த்து பல வாடிவாசல்களில் அவிழ்த்து விட்டோம் அது எங்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது, தற்போது திண்டுக்கல்லில் இருந்து புலிகுளம் வகை ஜல்லிக்கட்டு காளையை வாங்கி அதற்கு தினமும் வெண்ணாற்றில் நீச்சல் பயிற்சி, மண்ணை கொத்துதல், நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும், அதற்கான உணவுகளையும் வழங்கி வருகிறோம். இந்த காளையும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்றனர்.