தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஓய்வு பெற்ற தலைவர் பழனிகுமார் தலைமை  வகித்தார். தாங்கினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனரும் மறுவரையறை ஆணைய உறுப்பினருமான பொன்னையா, செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து மறுவரையறை பற்றிய கருத்துக்கள் ஆட்சேபனைகள் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டது. இதில் திமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன்,  எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், எம்பி ராமலிங்கம், நகர செயலாளர் தமிழழகன், மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள்  கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராமராமநாதன் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




அப்போது கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம்  இது நேர்மையாக நாணயமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஆட்சி, இது கட்சி ஆட்சி அல்ல, மக்களாட்சி என்று தலைவர் சொல்லியிருக்கிறார். மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் அதிமுக உள்ளிட்ட மாற்றுகட்சியினர் இந்த பெட்டியில் மனு போட்டால் கிடைக்குமா? கிடைக்காதா என நினைத்தார்கள். ஆனால் இன்றைக்கு அதில் அதிகமாக பலன் அடைந்தவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும், பொதுமக்களும் தான்.  தற்போது கூட தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தேர்வு செய்துள்ளார்.


அதிலும்  திமுக அல்லாதவர்கள்தான் அதிகமாக பயன் பெறுகின்றனர். இதன் மூலம் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதைதான் மக்கள் பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என  பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர்  ராஜாநடராஜன் எழுந்து இது கும்பகோணம் மாநகராட்சி மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் என்று தான் மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.




இது உங்கள் கட்சி தலைவர் புகழ் பாடும் கூட்டமும் அல்ல நாங்கள் அதை கேட்பதற்கும் வரவில்லை என ஆக்ரோஷமாக கூறியதால்,  திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தமிழழகன் உள்ளிட்ட திமுகவினரும் எழுந்து வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேடை முன்பு  ஏறி சத்தமிட்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அதிகாரிகள் முன்பு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போராடி சமாதானபடுத்தினார். அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அசோகன் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் இருக்கையில் அமர வைத்தார்.




தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முன்பாக மாநகராட்சி வார்டுகளை வரையறை செய்வதில் உள்ள குளறுபடிகள் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள குளறுபடிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பான குளறுபடிகள் போன்றவற்றில் முறையாக தீர்வு காண வேண்டும்  என அனைத்து கட்சி தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய, தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார், தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் மனுக்கள் மீதான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆய்வு நடத்தி தேவையான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.