நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி., ஜவகர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தகவலின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் (37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும். இது தொடர்பாக படகில் காவலுக்கு நின்றிருந்த பாப்பாக்கோயிலை சேர்ந்த சரவணன் (37), கீச்சாம்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் (34), அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (35), அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த நிவாஸ் (30) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.