திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை சுகாதாரத் துறையினர் தகவல்.
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாடு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.குறிப்பாக அனைவரும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்ததன் விளைவாக அரசின் சார்பில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு பொதுமக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் வேகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை. நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நான்கு நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்படைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும். கட்டாயம் தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றின் காரணமாக 48 ஆயிரத்து 17 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 541 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 472 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 16 லட்சத்து 48 ஆயிரத்து 486 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்