முன்விரோத தகராறில் அண்ணன், தம்பியை கொலை செய்த தந்தை மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முன்விரோதம் காரணமாக அண்ணன்,  தம்பியை கொலை செய்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஆர்ப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் மதன் (22), மற்றொரு மகன் ஸ்ரீதர்ராஜா (20) ஆகியோரை அதே ஊரை சேர்ந்த ருக்குன் பாட்ஷா, அவரது மகன்கள் மன்சூரலிகான், மர்ஜித் அலிகான் மற்றும் உறவினர் ராஜ் முகமது ஆகிய நால்வரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கடந்த 12.5.2013 அன்று படுகொலை செய்தனர். இதுதொடர்பாக கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 நபர்களும் நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீனில் வெளிவந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு  திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை  முடிவடைந்த நிலையில், அமர்வு நீதிபதி சாந்தி  தீர்ப்பளித்தார். அதன்படி, ருக்குன்பாட்ஷா, அவரது மகன் மர்ஜித் அலிகானுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகனான மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உறவினர் ராஜ் முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த நான்கு நபர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை வழங்கப்பட்ட நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நான்கு பேரின் உறவினர்களும் அதேபோன்று கொலை செய்யப்பட்ட இரண்டு நபர்களின் உறவினர்களும் நீதிமன்ற வாசலில் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.  தீர்ப்பு வழங்கும் நிலையில் காவல்துறையினர் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் கொலை வழக்கில் தீவிர விசாரணை செய்து கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்தமைக்காக விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அண்ணன் தம்பி கொலை செய்த நான்கு நபர்களுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதாடிய மணிவண்ணன் அவர்களை உயிரிழந்த சகோதரர்களின் உறவினர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.