நடுக்கடலில் தேசிய கொடியேற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி 75 ஆவது சுதந்திர தின விழாவை  நாகை மீனவர்கள் கொண்டாடியுள்ளனர்.

 

இந்திய திருநாட்டின் 76 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் தேசிய கொடியை பறக்கவிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேல் படகில் நடு கடலுக்கு சென்று தேசிய கொடியை ஏற்றி அசத்தி உள்ளனர் நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள். சுதந்திர திருநாட்டின் 76 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாகூர் பட்டினச்சேரி ஆரியநாட்டுதெருவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை படகில் நடுகடலுக்கு சென்றனர்.

 

அங்கு 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நடுக்கடல் நீரில் மிதக்கவிட்ட மீனவர்கள் படகில் இருந்தபடியே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்ட மீனவர்கள் பட்டாசு வெடித்தும், படகில் இருந்தபடியே இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள் நடுக்கடலில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.