சிபிசிஎல் பொது நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு 2013 சட்டப்படி உரிய விலை மற்றும் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தையும்சிபிசிஎல் நிறுவனத்தையும் கண்டித்து வரும் 18ம் தேதி சிபிசிஎல் நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

 

நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 690 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நில கொடுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், பனங்குடி பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் நலச்சங்க போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 



 

கூட்டத்தில்  கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத சிபிசிஎல் நிர்வாகம் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வரும் 18ம் தேதி முதல் சிபிசிஎல் நிறுவன நுழைவாயில் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு சிபிசிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க செயலாளர் சக்திவேல், பொருளாளர் முருகேசன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.