நாகை காரைக்கால் மாவட்டங்களில் கொட்டிதீர்த்த கனமழை ; நாகை மாவட்டத்திற்கு1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை,காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. நாகை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முந்தினம் இரவு முதல் தட்பவெட்ப நிலை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து, நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டிதீர்த்த கனமழை இன்று காலை 5 மணியில் இருந்து  விடாது அடித்து நொறுக்கியது. குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

 



 

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீர் பெய்த கனமழையால் பருத்தி, நிலக்கடலை,  முந்திரி, கத்தரி, மா உள்ளிட்ட தோட்டப் பயிர் சாகுபடி செய்துள்ள விவகாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடல் காற்று மற்றும் அலை சீற்றத்துடன் காணப்படுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், திருப்பட்டினம், நிரவி, திருநள்ளாறு, அம்பகரத்தூர், வாஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.