நாகையில் உள்ள அரசு உதவிபெறும் தூய அந்தோனியார் மேல்நிலை பள்ளி தாளாளர் மாற்று சான்றிதழ் வாங்க வரும் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டாயக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவுகிறது. 

 

நாகை நகர் பகுதியில் அரசு உதவி பெறும் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழமையான பள்ளியின் தாளாளராக பாதிரியார் டேவிட் செல்வகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே மாற்று சான்றிதழ் பெறாமல் உள்ள மாணவர்களிடம் பள்ளி தாளாளர் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு அதிக அளவிலான கட்டணம் விதித்து அதில் பாதியாவது கட்ட வற்புறுத்துவதாக  புகார் எழுந்துள்ளது. மாற்றுச் சான்றிதழை கொடுப்பதற்கு குறைந்தபட்ச தொகையாக 50 ரூபாய்க்கும் கீழ் வசூல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு இருந்து வரும் நிலையிலும், பள்ளியின் தாளாளர் 2000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஏழை மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் பணம் கட்ட வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



 

மேலும் இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் துணையாக இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாளாளர் டேவிட் செல்வகுமார் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த என்சிசி அமைப்பை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ள ஆசிரியர்கள், மீண்டும் பள்ளியின் வளர்ச்சிக்காக என்சிசி அமைப்பை உருவாக்கி மாணவர்களின் நலன்களைக் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நாகையில் பள்ளியின் தாளாளர் ஏழை-எளிய மாணவர்களிடம் அதிகளவிலான பணத்தை மாற்றுச் சான்றிதழை பெறுவதற்காக வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 



 


ஆந்திரா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை நாகையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

 



 

 

 

ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நாகை புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை ரயில் நிலையம் அருகே பழைய பேருந்து நிறுத்தத்தில்  இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்தில் ஏற முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நாகை நகர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 



 

இதில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கமாயன் இவரது மனைவி ஓச்சம்மா. இவர்கள் இரண்டு பேரும் தற்போது கர்நாடகா மாநிலம் ரெய்சூர் தாலுகா சக்தி நகரில் வசிப்பது தெரியவந்தது. இந்த இரண்டு பேரும் இணைந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விஜயநகர் பிப்ரபள்ளி அக்ரகாரத்தை சேர்ந்த அய்யர்சாமி என்பருடன் சேர்ந்த ரயில் மூலம் திருச்சி வந்தனர். அங்கிருந்து பஸ் ஏறி 22 கிலோ கஞ்சாவை எடுத்து கொண்டு நாகை வந்தனர். நாகையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை இலங்கை அனுப்ப இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர்களை சிறையில் அடைத்தனர்.