நாகை அருகே இருவேறு பகுதிகளில் மண்சுவர் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த ஆதமங்கலம் ஊராட்சி, தென்மருதூர் கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது மனைவி அன்னப்பட்டு ஆகியோர் அவர்களது மூன்றாவது மகனான மணிகண்டன் வீட்டில் வசித்து வருகின்றனர். பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மணிகண்டனுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாட்டிலிருந்த இவர்களது வீட்டினை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்கான பணியை தொடங்க முதற்கட்டமாக நேற்று வீட்டின் மேற்பரப்பு பகுதி பாதி இடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி ல், இன்று காலை அன்னப்பட்டு தான் வளர்த்து வந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அனுப்பிவிட்டு பாதி இடிக்கப்பட்ட நிலையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முகப்பு பகுதியிலுள்ள சிமெண்ட் காரை (சிலாப்) பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது. தகவறிந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து அவரை மீட்ட நிலையில், உடல் நசுங்கி படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீசார் மற்றும் ஆதமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்குவளை அடுத்துள்ள பையூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி(62) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை அருகே இருவேறு பகுதிகளில் மண்சுவர் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை: திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
நாகை அருகே மஞ்சகொல்லை ஊராட்சியில் மூன்று மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக் கொள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார தெரு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நாகப்பட்டினம் - திருவாரூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் மஞ்ச கொள்ளை கடை தெருவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முறையாக குடிநீர் வழங்காத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், குடிநீர் கிடைக்க அதிகாரியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது .
தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என்றும் இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காலையில் அலுவலகப் பணிக்கு செல்வது பள்ளிக்கு செல்வது தாமதம் ஏற்படுவதாகவும் தங்கள் பகுதிக்கு விரைந்து குடிநீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்