தஞ்சாவூர்: உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்க பரிந்துரை செய்யப்படும் என்று நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் தெரிவித்தார். 


தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அவர் பெரியகோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


நான் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன். பெரிய கோயிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்மீகத்தையும், தேசியத்தையும் நம்பக்கூடியவன் நான்.


தஞ்சாவூர் பெரியகோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுகுறித்து அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேட்டுப் பார்க்கிறேன். இது தொடர்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன். உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்க நானும் பரிந்துரை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


முன்னதாக, ஆளுநர் இல. கணேசனுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உடன் இருந்தார்.


பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.


இக்கோயில் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.


கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும் அந்த ஆற்றலானது, இந்த ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.